நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் தொடங்கும் இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடர், இந்த முறை சற்று தாமதமாக டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தொடங்கும் இந்தக் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பலவற்றைக் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று ஒன்றிய அரசு தரப்பில் அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடரில் மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுமென நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேட்டுக் கொண்டார்.