இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் நேற்று (04-06-24) வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்துத் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அப்துல் ரஷீத் ஷே என்ற எஞ்சினியர் ரஷீத் சுயட்சையாக போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதே போன்று, தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் கைது செய்யப்பட்டு அசாமில் உள்ள திப்ருகார் சிறையில் உள்ள அம்ரித்பால் சிங் மக்களவைத் தேர்தலில் போட்டியிடு வெற்றி பெற்றுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் இருவரும் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து அரசியலமைப்பு நிபுணரும், மக்களவையின் முன்னாள் பொதுச்செயலாளருமான பிடிடி ஆச்சாரி கூறுகையில், “நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொள்வது அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமையாகும். ஆனால் அவர்கள் தற்போது சிறையில் இருப்பதால், எஞ்சினியர் ரஷீத் மற்றும் அம்ரித்பால் சிங் ஆகியோர் பதவியேற்பு விழாவிற்கு பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்ல அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். பதவி பிரமாணம் செய்தவுடன் அவர்கள் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்.
பதவி பிரமாணம் செய்த பின்னர் அவையில் கலந்துகொள்ள முடியாத நிலை குறித்து சபாநாயகருக்குக் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும். அதன்பின் சபாநாயகர் அவர்களின் கோரிக்கைகளை உறுப்பினர்கள் இல்லாத குழுவுக்கு அனுப்புவார். உறுப்பினர் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் இருக்க அனுமதிக்க வேண்டுமா என்று குழு பரிந்துரைக்கும். பின்னர் அந்தப் பரிந்துரை சபாநாயகரால் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்படும். எஞ்சினியர் ரஷீத் அல்லது சிங் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், 2013 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று கூறினார்.