முல்லைப் பெரியாற்றில் புதிய ஆர்ச் அணை என்ற புதிய கோரிக்கையுடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு ஆதரவு கேட்டுவருகிறார் கேரள திரைப்பட தயாரிப்பளர் மற்றும் எடிட்டரான பிரதீப் எமிலி.
இருவாரங்களுக்க முன் கேரளாவைச் சேர்ந்த வக்கீல் ஜோய் என்பவர், உச்சநீதிமன்றத்தில் பெரியாறு அணை பலமிழந்து விட்டதாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 142 அடி தாண்டியபோது கேரளாவில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது எனவே அணையின் நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார். வரும் 24ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் தான் கேரள மாநிலத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பளர் மற்றும் எடிட்டரான பிரதீப் எமிலி என்பவர் முல்லை பெரியாறு குறித்து "முல்லப்பெரியார் ஒரு முன்கருதல்" என ஆறரை நிமிடங்கள் ஓடக்கூடிய 3டி அனிமேசன் குறும்படத்தை முல்லைப் பெரியாற்றில் புதிய ஆர்ச் அணை என்ற புதிய கோரிக்கையுடன் மக்களின் ஆதரவு தேடி சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ளார்.
அதில் நூறாண்டுக்குமேல் பழமையான பெரியாறு அணை எப்போது வேண்டுமானாலும் ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கலாம் எனவே தற்போதைய அணையிலிருந்து சற்று தள்ளி புதிய ஆர்ச் டேம் (வளைவு அணை) ஒன்று கட்டுவது, இரண்டு அணைக்கும் இடையே உள்ள இடைவெளியில் காங்கரீட் கொண்டு நிரப்பி இரண்டு அணையையும் இணைத்து பலப்படுத்த வேண்டும், அணையின் மேல்பகுதி வழியாக வள்ளக்கடவு, கெவி சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து செல்வதனால் கேரள சுற்றுலாத்துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் மக்கள் இதை கோரிக்கையாக்க வேண்டும் என்றும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.