ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இதில் நேற்று முன்தினம் (27.08.2021) இந்தியாவின் பவினாபென் படேல், மகளிருக்கான கிளாஸ் 4 டேபிள் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறியதோடு பதக்கத்தையும் உறுதிசெய்தார். இதற்கு முன்னர் பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் எந்த இந்தியரும் காலிறுதிவரை கூட முன்னேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (29.08.2021) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் பவினா தோல்வியடைந்தார். இருப்பினும், பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் பெருமை பெற்றார் வெள்ளி வீராங்கனை பவினா.
இந்நிலையில் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளி வென்றுள்ளார். நிஷாத் குமார் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு இரண்டாவது வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நிஷாத் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 'திறமையான விளையாட்டு வீரர் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி' என அவர் தெரிவித்துள்ளார்.