நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர, உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலியல் வன்புணர்வு குற்றங்கள் அதிகரிப்பதைக் கட்டுக்குள் கொண்டுவர அரசியல் கட்சித் தலைவர்கள் பலே ஐடியாக்களை உதிர்த்துள்ளனர். இவர்களின் இந்தக் கருத்துகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே பொது சமூகத்தில் மறுக்கப்பட்டிருந்தாலும், இன்னமும் அதே கருத்துகளை அப்படியே சொல்லி வருவது அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ரமாஷங்கர் வித்யார்த்தி, ஆண், பெண் இருவருக்கும் இடையே உடலளவில் நிறைய மாற்றங்கள் இருப்பதால், அதற்கு ஏற்றாற்போல் உடையணிய வேண்டும். அதன்படி, பெண்கள் கவர்ச்சியான உடைகளைத் தவிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் யாரும் கவனம் செலுத்தாவிட்டால், வன்புணர்வு குற்றங்களுக்கு முடிவு கிடைக்காது என தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் புபேந்திர சிங், ஆபாச படங்களால்தான் நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன என இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
அதேபோல், பா.ஜ.க. மூத்த தலைவர் வினய் பிஹாரி, செல்போன்களும், இறைச்சி உணவுகளுமே பாலியல் குற்றங்களுக்கு முக்கியக் காரணம் என கூறியிருந்தார்.