பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகள் தடை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை விளக்கம் அளித்துள்ளது.
லடாக் எல்லைப்பகுதியில் நடைபெற்ற இந்திய, சீன வீரர்களுக்கு இடையேயான மோதலுக்குப் பிறகு, சீன நிறுவனங்களின் டிக்டாக், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் உள்ளிட்ட 59 செயலிகளைத் தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. சீனாவுக்கான பொருளாதார ரீதியிலான பதிலடியாக இதனைக் கூறிவரும் மத்திய அரசு தற்போது, மேலும் 118 செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில், வீசாட், பப்ஜி உள்ளிட்ட செயலிகளும் அடங்கியுள்ளன.
இந்நிலையில், இந்தச் செயலிகள் மீதான தடை குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், "ஆண்ட்ராய்டு, ஐஃபோன் செல்பேசி தளங்களில் ஏராளமான செயலிகள் பயனர்களின் தரவுகளை அவர்களின் அனுமதியின்றி திருடுவதாகவும் அந்தச் செயலில் ஈடுபடும் விஷமிகள் இந்தியா அல்லாது வெளிநாட்டு சர்வர்கள் மூலம் தரவுகளைத் திருடும் பணியில் ஈடுபடுவதாகத் தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம், மத்திய உள்துறை அமைச்சகம் தவறான செயலிகளை முடக்குவதற்குப் பரிந்துரை செய்திருந்தன. அதன் அடிப்படையில் நடத்திய கண்காணிப்பில் அவை பயனர்களின் தரவுகளைத் திருடுவது உறுதிப்படுத்தப்பட்டதால், அவற்றின் செயல்பாடு இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் கருதி 118 செயலிகள் முடக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.