ஊரடங்கு முடிந்து பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார்.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது. 2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்தியாவைப் பொறுத்தவரை 4000க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 109 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் இந்தக் கரோனாவைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை அளிக்கப்பட்டு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், ஊரடங்கு முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "இந்தச் சூழலில் இதுகுறித்து முடிவெடுப்பது கடினமான ஒன்று. ஏப்ரல் 14-ம் தேதியன்று நிலைமையை மீண்டும் ஆய்வு செய்து,அப்போதைய சூழலைப் பொருத்து பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்கலாமா அல்லது விடுமுறையை நீட்டிக்கலாமா என்று முடிவு செய்யப்படும்.நமது நாட்டில் 34 கோடி மாணவர்கள் இருக்கின்றனர்.இது அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம்.அவர்களின் பாதுகாப்பே இப்போது முக்கியம்.மீண்டும் விடுமுறை விடப்பட்டால்,மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் இருப்பதை உறுதி செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.