கொரோனா தடுப்பூசிகளால் ஏற்பட்ட மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்திய பிறகு உயிரிழந்த இரு பெண்களின் பெற்றோர்கள் தங்களுக்கு இழப்பீடு வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் கொரோனா தடுப்பூசிகளால் ஏற்பட்ட மரணங்களுக்கு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது. கடந்தாண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில், மத்திய அரசின் விளக்கம் வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்த வழக்கில் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்த மத்திய அரசு, கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மும்முரமாக பின்பற்றி வருவதாகவும் 219 கோடிக்கும் அதிகமாக டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளது.
பொதுநலன் கருதி தகுதியுடைய அனைத்து நபர்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவித்த அதே வேளையில் தடுப்பூசி செலுத்த யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டது முற்றிலும் தன்னார்வமே என்றும் கூறியுள்ளது. எனவே, கொரோனா தடுப்பூசிகளால் ஏற்பட்ட மரணங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.