மேற்குவங்கத்தில் அதிக முதலீடு செய்துள்ள நிறுவனமாக ஜியோ நிறுவனம் உள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைவருமான முக்கேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய ஜியோ நிறுவனத்தின் நிறுவனர் முக்கேஷ் அம்பானி, “ரிலையன்ஸ் நிறுவனம், மேற்குவங்கத்தில் ரூ.10,000 கோடியை முதலீடு செய்யத் திட்டம் வைத்துள்ளது. மேற்குவங்கத்தில் டிஜிட்டல் தளத்தில் அதிக முதலீடு செய்துள்ள நிறுவனமாக ரிலையன்ஸ் மாறியுள்ளது. 2019-ம் ஆண்டிற்குள் மாநிலத்தின் 100 சதவீத மக்களும் ஜியோ நெட்வார்க் மூலம் இணைக்கப்படுவார்கள். ஜியோ நிறுவனம் புதிதாக ‘ஜியோ பாய்ண்ட்’ எனும் ஜியோ மையத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் வளர்ந்து வரும் கிராமப்புற விநியோகிஸ்தர்களும், மக்களும் நேரடியாக பயன்பெறுவார்கள். ஏற்கனவே மேற்குவங்கத்தில் 350 ஜியோ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் இறுதிக்குள் அது 1,000 மையமாக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, 2019-ம் ஆண்டு இறுதிக்குள் மேற்குவங்க மாநிலத்தின் 100 சதவீத மக்களும் ஜியோ நெட்வார்க் மூலம் இணைக்கப்படுவார்கள் எனும் அறிவிப்பு. ஏற்கனவே ஜியோ நிறுவனத்தின் நுழைவால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதன் ரீ-சார்ஜ் பிளான்களை மாற்றி அமைத்தது. இந்நிலையில் முக்கேஷ் அம்பானியின் இந்த அறிவிப்பு முகவும் கவனிக்கப்பட வேண்டியது.