மேற்கு வங்கத்தில் மாடு திருடியதாக இருவர் அடித்துக் கொலை!
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பசுக்களை திருடியதாக இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர்.
ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி கிராமத்தில் 27 ஆம் தேதி இரவு இரண்டு பசுக்களை ஏற்றிய வேன் அந்த கிராமத்தை சுற்றி வந்திருக்கிறது. இதையடுத்து அந்த வேனை கிராமத்தினர் விரட்டி பிடித்து, வேனிலிருந்த இருவரை அடித்துத் துவைத்திருக்கின்றனர்.
இதில் இருவரும் இறந்துவிட்டனர். நள்ளிரவு நேரத்தில் கிராமத்தை அந்த வேன் சுற்றி வந்ததால்தான் கிராமத்தினர் சந்தேகப்பட்டு விரட்டிப் பிடித்திருக்கின்றனர். பசுக்களை ஏற்றிச் செல்வதற்குரிய ஆவணங்களும் அவர்களிடம் இல்லை.
இறந்த இருவரில் ஒருவர் அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹபிஸுல் ஷேக், இன்னொருவர் கூச் பிகார் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ஹுசேன் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
வங்கதேச எல்லைப்புற மாவட்டமான ஜல்பைகுரியிலிருந்து வங்கதேசத்துக்கு மாடுகள் கடத்தப்படுவது வழக்கம் என்றும் அவர் கூறினார்.