மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சந்தேஷ்காலி போராட்டத்தை முன்னிருந்து நடத்திய பா.ஜ.க பெண் உறுப்பினரை மேற்கு வங்க அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததிருப்பது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க அமைச்சரான ஃபிர்ஹாத் ஹக்கீம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “மக்களவைத் தேர்தலுக்கு முன் தாடி வைத்த நபர் மேற்கு வங்கத்திற்கு வந்தார். அவர் பெயர் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் பெயர் தான் நரேந்திர மோடி. அவர் மேற்கு வங்கத்திற்கு வந்து சந்தேஷ்காலி கிராம தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் போலி கவலையை வெளிப்படுத்தினார். சந்தேஷ்காலி தொகுதிக்கு வேட்பாளரை பா.ஜ.க அறிவித்தது. எங்கே அந்த வேட்பாளர். அந்த வேட்பாளர் (ரேகா பத்ரா) தோல்வியடைந்தார். பா.ஜ.க தேர்தலில் தோல்வியடைந்தது. அவர்களுக்கு வழக்கு போட தான் தெரியும்” என்று கூறி ரேகா பத்ரா தோல்வியடைந்தது குறித்து சர்ச்சைக்குரிய பேச்சை பேசினார்.
இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், “ரேகா பத்ரா, ஒரு பெண் என்பதைத் தாண்டி, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இது அவரை இழிவுபடுத்துவது மட்டுமல்ல, அவரது முழு சமூகத்தையும் புண்படுத்துவதாகும். இழிவான கருத்துக்காக அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலினப் பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷேக் ஷாஜகான் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஷேக் ஷாஜகான் மீது சந்தேஷ்காலி கிராம பெண்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடந்து வந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வந்ததது. இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய ரேகா பத்ரா, பாலியல் வன்கொடுமை தொடர்பாக முதன் முறையாக புகார் அளித்தார். ரேகா பத்ரா முன்னின்று நடத்திய இந்தப் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மக்களவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி அரசை வீழ்த்துவதற்காக சந்தேஷ்காலியின் கீழ் வரும் பாசிர்ஹாட் தொகுதியில் ரேகா பத்ரா போட்டியிட பா.ஜ.க வாய்ப்பு கொடுத்தது. ஆனால், இந்த தேர்தலில் திரிணாமுல் மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான ஹாஜி நூருல் இஸ்லாமிடம், ரேகா பத்ரா தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.