மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாம்பூர் பகுதியில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது மாணவர்களுக்கும் போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினர் இன்று பந்த் அறிவித்தது. அதன்படி முக்கிய பகுதிகளில் பல கடைகள் அடைக்கப்பட்டன.
மேலும் பந்தையொட்டி பாஜகவினர் சாலை மறியல், ரயில் மறியல் போன்ற வகையில் தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சில இடங்களில் பாஜகவினர் வன்முறையையும் கையாண்டு வருகின்றனர். ஓடும் அரசு பேருந்துகளை கல்லை கொண்டு அடித்து உடைக்கின்றனர். இதனால் பேருந்துகளை ஓட்டும் டிரைவர்கள் ஹெல்மெட் அணிந்துகொண்டு தங்களின் வேலையை பார்க்கின்றனர். பாஜகவினர் வன்முறையில் இறங்கியுள்ளதால், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களுக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர். இன்று பந்த்தில் ஈடுபட்டிருக்கும் கடைகளை திறக்க சொல்லி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சியினரும் வன்முறையில் இறங்கியிருப்பதால் போலிஸ் பாதுகாப்பு படைகளை குவித்து வருகிறது.