கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ள நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது.
பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 131 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 இடங்களிலும், மற்றவை 6 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. பெங்களூரு நகரில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த தேர்தலை விட இந்த முறை 47 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணியில் இருப்பது கர்நாடக காங்கிரஸ் கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடகாவில் ஆட்சியை இழந்ததால் தென் இந்தியாவில் ஆட்சியில் இருந்த ஒரு மாநிலத்தையும் பாஜக இழந்துள்ளது. இதனால் தென் இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ''தவறுகளை திருத்திக்கொண்டு பாஜகவை வலுப்படுத்துவோம். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு தோல்விக்கான காரணம் குறித்து ஆராயப்படும்'' என தோல்வியை ஒப்புக்கொள்ளும் வகையில் தெரிவித்துள்ளார்.