Skip to main content

வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை உயர்வு!

Published on 04/08/2024 | Edited on 04/08/2024
Wayanad landslide toll rises

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில்  முப்படையைச் சேர்ந்த வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட வீரர்கள் ஆறாவது நாளாக இன்றும் (04.08.2024) மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தது இந்தியாவையே உலுக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது எனக் கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை 357 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 200 பேரைக் காணவில்லை எனக் கேரளா அரசு தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 2000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலச்சரிவில் தங்கள் சொத்துக்களை இழந்து நூலிழையில் உயிர் பிழைத்தவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை உயிர் பிழைத்தவர்களுக்கு 200 தனிநபர் கவுன்சிலிங் மற்றும் 42 குழு கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட மக்களை தேடும் பணி ஆறாவது நாளாகத் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சார்ந்த செய்திகள்