இந்தியாவில் போலி செய்திகளை பதிவிடுவதை தடுப்பதற்காக புதிதாக ஐந்து நிறுவனங்களை பணியமர்த்தியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.
ஃபேஸ்புக் மூலம் அதிகாமான போலி செய்திகள் பரவுவதால் அதன் மீது நடவடிக்கை எடுத்து, அதனை தடுக்க வேண்டும் என்று தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால் இந்த நேரத்தில் போலி செய்திகள் வெளியாவதைத் தடுக்க சமூக வலைதளங்களை மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதனையடுத்து தனது வலைதளம் மூலம் பதிவிடப்படும் செய்திகளில் போலி செய்தியைக் கண்டறிந்து நீக்க பரிந்துரைக்க ஏற்கனவே சில நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் நிறுவனம் பணியாற்றிவருகிறது.
இந்நிலையில் தற்போது இந்தியா டூடே உள்ளிட்ட மேலும் ஐந்து நிறுவனங்களை ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக பணியமர்த்தியுள்ளது. இந்நிறுவனங்கள் செய்தி கட்டுரைகளின் உண்மைத்தன்மை, பகிரப்படும் புகைப்படம், வீடியோக்களின் உண்மைத்தன்மை உள்ளிட்டவற்றையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமென தெரிவித்துள்ளது. மேலும் இது ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட ஆறு மொழிகளின் கீழ் போலி செய்திகளை கண்டறியுமென ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.