இந்தியா கொண்டு வருவதற்கு எதிராக விஜய் மல்லையா தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எப்போது வேண்டுமானாலும் அவர் இந்தியா கொண்டுவரப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை மீண்டும் இந்தியா அழைத்து வர மத்திய அரசு முயன்று வந்தது. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சூழலில், இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதற்கு எதிராக விஜய் மல்லையா இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவரது மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவி்ட்டது. இதையடுத்து விஜய் மல்லையாவுக்கு இருந்த 3 சட்ட வாய்ப்புகளும் முடிந்ததால் அவரை இந்தியா அழைத்து வருவதற்கான செயல்களை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் விஜய் மல்லையா இந்தியா அழைத்துவரப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், முதலில் சி.பி.ஐ. வசம் உள்ள வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள மும்பை ஆர்தர் சிறையில் அவர் அடைக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.