மும்பையில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, மாநிலங்களைவையில் சில உறுப்பினர்களின் செயல்கள் எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. மாநிலங்களவையின் தலைவராக இருக்கும் எனக்கு அவர்களின் செயல்கள் வேதனையை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக சில பிரிவு உறுப்பினர்களின் செயல்பாட்டால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன்.
நாடாளுமன்றம் அதற்குரிய மரபுகளுடன், விதிமுறைகளுடன் செயல்பட வேண்டும், இதற்கு முன் இருந்த மாநிலங்களவை உறுப்பினர்களால் அவ்வாறு தான் செயல்பட்டது. ஆனால், கூட்டத்தொடரின் போது அதிகாரபூர்வ அலுவலக கடிதங்களை கிழித்து, அவைத்தலைவர் மீது வீசுவதுதான் சில அறிவார்ந்த சில உறுப்பினர்களின் செயலாக இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், சிறப்பையும் பேசமுடியாத, செயல்படவிடாத சூழலுக்கு கொண்டு போய்விடும் என்றும் தெரிவித்தார்.