பாண்டிச்சேரியில் பெண்களுக்காக கரோனா தடுப்பூசி முகாமை நாளை துவக்கி வைக்கிறார் ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன். அரசு மகளிர் மருத்துவமனையில் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு முகாமை துவக்கி வைக்கிறார் ஆளுநர்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "புதுச்சேரியில் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மருத்துவமனையில் பெண்களுக்கான தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது. முதலில் நான் தடுப்பூசி போட்டுக் கொள்கிறேன். கரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணிய வேண்டும். தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்பவர்களும், பிரச்சாரத்தைக் கேட்க வருபவர்களும், வாக்களிக்க வருபவர்களும் முகக்கவசம் அணியுங்கள்.
வாக்களியுங்கள் என்று கேட்பதற்கு முன்பு, முகக்கவசம் அணியுங்கள் எனக் கேட்கிறேன். தற்போது புதுச்சேரியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்த வேண்டிய நிகழ்வு ஏதுமில்லை. அது போன்ற நிகழ்வு வரக்கூடாது என்பதில் மிகக் கவனம் செலுத்துகிறோம். கடையடைப்பு, தனிமைப்படுத்துதல் போன்ற மிக அபாயகர கட்டத்தை மீண்டும் நாம் சந்திக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
தொற்று அதிகரிக்கக் காரணம், நெருக்கமான இடத்தில் முகக்கவசம் அணியாமல் இருப்பதுதான். முகக் கவசம் அணிவதால் 50 சதவீதம் தொற்றினை குறைக்க முடியும். வாக்களியுங்கள் என்பதுபோல் முகக்கவசம் போடுங்கள் என்கிற பிரச்சாரத்தை முன்னெடுக்கிறோம். முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் போடவேண்டிய அவசியமில்லை. அபராதம் போட்டுதான் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நிலை வரக்கூடாது. கூட்டம் கூடும் இடத்தில் முகக்கவசம் அணிய போலீஸார் வலியுறுத்துவார்கள். தேவையான அளவு தடுப்பூசி இருக்கிறது. தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லை" என்று கூறினார் ஆளுநர் தமிழிசை.