நீட் முடிவுகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 13 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் செப்டம்பர் 13 -ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. கரோனா ஊரடங்கு விதிமுறைகளால் தேர்வைத் தவறவிட்ட மாணவர்களுக்காகக் கடந்த 14 -ஆம் தேதி நடத்தப்பட்டது. இதையும் சேர்த்து, இந்த ஆண்டு மொத்தம் 13.66 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.
இதில், 7.70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4.27 லட்சம் மாணவிகளும், 3.43 லட்சம் மாணவர்களும் நான்கு திருநங்கைகளும் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். மாநிலங்கள் வாரியாக பார்க்கும்போது, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அதிகபட்சமாக 88,889 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 79,974 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொழிவாரியாகப் பார்க்கையில், இந்த ஆண்டு நீட் தேர்வு 11 மொழிகளில் நடத்தப்பட்டது. ஆங்கிலம், இந்தி, அசாமி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அதிகபட்சமாக 77 சதவீதம் மாணவர்கள் ஆங்கில வழியிலும், 12 சதவீதம் பேர் இந்தியிலும், 11 சதவீதம் மற்ற மொழிகளிலும் தேர்வு எழுதியுள்ளனர்.