விவசாய பயிர்க்கழிவுகளை எரித்ததற்காக முதல் முறையாக உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பயிர்க்கழிவுகளை எரித்த குற்றத்திற்காக 29 விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். காற்று மாசு ஏற்படுவதால் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பயிர்க்கழிவுகளை எரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியது. இதன் காரணமாக பொதுமக்கள், நோயாளிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டனர். அதேபோல் வாகனங்களுக்கு கட்டுபாடு, உள்ளிட்ட பலவேறு நடவடிக்கைகளை டெல்லி மாநில அரசு எடுத்து வருகிறது. இதனால் காற்றின் தரக்குறியீடு குறைந்து வருகிறது
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பயிர்க்கழிவுகளை மாநில அரசுகளே கொள்முதல் செய்து, அதற்கான தொகையை விவசாயிகளுக்கு தர வேண்டும் என்றும், பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.