நடிகர் பிரகாஷ் ராஜ், கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத் மற்றும் முன்னாள் கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்க வலியுறுத்தி கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுக்கும் நிஜகுனநாத சுவாமிக்கு ஜனவரி 25 என தேதியிடப்பட்ட அந்த கடிதத்தில், "இதில் பெயரிடப்பட்ட அனைத்து நபர்களும் ஜனவரி 29 முதல் நிச்சயமாக அகற்றப்படுவார்கள். இந்த துரோகிகள் அனைவரையும் சம்ஹாரம் செய்வதற்கான நல்ல நேரம் ஜனவரி 29 ல் குறிக்கப்பட்டுள்ளது. உங்கள் கடைசி பயணத்திற்கு தயாராக இருங்கள். நீங்கள் தனியாக இல்லை. நீங்கள் அவர்களையும் (பட்டியலில் உள்ள மற்றவர்களையும்) அவர்களின் கடைசி பயணத்திற்கு தயார் செய்ய வேண்டும். உங்கள் அனைவரையும் நாங்கள் நிச்சயமாக அகற்றுவோம்" என எழுதப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில், "முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்பட 15 பிரபலங்களை கொலை செய்வதாக கையெழுத்து இல்லாத ஒரு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை கர்நாடக அரசு தீவிரமாக கருதி, விசாரணை நடத்தி கடிதம் எழுதியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.