பாஜக மூத்த தலைவரும் , மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் நான் பிரதமராக ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும் நரேந்திர மோடியே எங்கள் தலைவர் , அவரே என்றும் பிரதமர் என அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்று மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே போல் ஒடிசா, கேரளா , மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் எனவும், உத்தரப்பிரதேசத்தில் நீங்கள் நினைத்தை விட அதிக தொகுதிகளில் நாங்கள் வெற்றிப்பெறுவோம் என உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றாலும் , மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே அமையும் எனவும், பாஜக அரசு அமையாது என கட்கரி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேஷ மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி , பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக ஆகிய கட்சிகளால் மும்முனை போட்டி ஏற்பட்டது. அந்த தேர்தலில் பாஜக உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் 72 தொகுதியில் பாஜக வெற்றிப் பெற்றது இதனை உணர்ந்த உத்தரப்பிரதேஷ மாநில முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் , முன்னாள் முதல்வருமான மாயாவதியுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை சந்திக்க முடிவு செய்து தேர்தலை சந்தித்துள்ளனர்.
இவர்களின் கூட்டணி பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் மாயாவதி தான் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ள நிலையில் சமீபத்தில் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தான் பிரதமராக பதவி ஏற்க தயார் என தெரிவித்துள்ளார். இவரின் பேச்சை உறுதிப்படுத்தும் விதமாக அகிலேஷ் யாதவ் இந்திய நாட்டின் அடுத்த புதிய பிரதமர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வருவார் என தெரிவித்துள்ளது காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளிலே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.