அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இவ்வாறு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.
இதனைத் தொடர்ந்து, சிசோடியாவின் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தியானத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று (16/04/2023) அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜர் ஆனார். அப்போது அவரிடம் சுமார் 9 மணி நேரம் சிபிஐ விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு டெல்லி கலால் கொள்கையை விமர்சிக்கும் அன்னா ஹசாரேயின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்ததுடன் அந்த பதிவில், "ஆட்சியைக் கைப்பற்றியதால் இனி ஆம் ஆத்மி கட்சியினர் அன்னா ஹசாரேயின் கருத்துகளைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஊழல் மூலம் மக்கள் மற்றும் அன்னா ஹசாரே ஆகியோரை முட்டாளாக்கி உள்ளனர். மேலும் ஆட்சியை பிடிக்க அன்னா ஹசாரேயைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தற்போது ஊழல் செய்வதன் மூலம் அரசு பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.