மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இன்று ஊடகங்களைச் சந்தித்தார். அப்போது, கரோனா தடுப்பூசிகள் குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், மார்ச் மாதத்தில் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் நிலையில் நாம் இருப்போம். கடந்த ஏழு நாட்களாக நாட்டின் 188 மாவட்டங்களில் புதியதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. 80 முதல் 85 சதவீத முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 20 முதல் 25 நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 18 முதல் 20 தடுப்பூசிகள் தயாரிப்பு நிலையில் உள்ளன. அவற்றை வரும் மாதங்களில் எதிர்பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், 'அனைவருக்கும் ஆரோக்கியம்' என்ற கனவு உலகில் எப்போதாவது நிறைவேறுமானால், அதன் மாதிரி இந்தியாவில் உருவாக்கப்படும் என்று நான் நம்புகிறேன். நமது முழுமையான அணுகுமுறை, பண்டைய மருத்துவ ஞானம், பிற சுகாதார வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் இணைந்து இவ்வுலகிற்கு ஒரு மாதிரியை உருவாக்கும். கரோனா தடுப்பூசியால் எந்த மரணமும் பதிவாகவில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, மரணம் நிகழ்ந்தால், அது விசாரிக்கப்படுகிறது. வழக்கமான பக்கவிளைவுகள் கூட குறைந்த நபர்களுக்கே ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.