ஏற்கெனவே மோசமாக இருந்த காஷ்மீரை மேலும் மோசமாக்கும் வகையில் மத்திய மோடி அரசு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை விலக்கிக் கொண்டது. காஷ்மீர் மக்களை வீடுகளுக்குள் அடைத்து வைத்து, ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ராணுவ வீரர்களை தெருக்களில் நிறுத்தி, அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசு சொல்லியது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை காஷ்மீரில் 10 ஆயிரம் முஸ்லிம்கள் திரண்டு மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் நடத்தினார்கள்.
படம் நன்றி - பிபிசி
காஷ்மீரில் நிலம் வாங்கலாம். காஷ்மீர் சிறுமிகளை மணம் முடிக்கலாம் என்று பாஜக தலைவர்கள் பேசிவரும் நிலையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், “இந்திய அரசமைப்பை ஏற்கமாட்டோம். எப்போதும் ஏற்கமாட்டோம்” என்று அவர்கள் முழக்கமிட்டார்கள். இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காஷ்மீர் நிலவரத்தை அறியச் சென்ற காஷ்மீர் எம்.பி. குலாம் நபி ஆஸாத்தும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோரும் ஸ்ரீநகர் விமானநிலையத்திலேயே தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா, சிபிஎம் செயலாளர் தாரிகாமி ஆகியோரின் நிலைமை என்ன என்றே தெரியவில்லை. இந்நிலையில்தான், பிபிசி தொலைக்காட்சி காஷ்மீரில் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் நடத்திய போராட்டத்தை ஒளிபரப்பியது. இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மனித உரிமைப் பிரச்சனையாக இது வெடித்துள்ளது. தகவல் அறியும் உரிமை மறுக்கப்பட்டிருப்பதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், பிரதமர் மோடியோ, காஷ்மீரில் அமைதியாக சினிமா சூட்டிங் நடத்தலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்.