டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் நாடு முழுவதும் உள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபமாக இயங்குவதாகவும், 4 வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக குறிப்பிட்டார். இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகள் மேலும் இணைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி சிண்டிகேட் வங்கியுடன், கனரா வங்கி இணைக்கப்பட்டு நாட்டில் நான்காவது மிகப்பெரிய வங்கியாக 15.20 லட்சம் கோடி வர்த்தகத்துடன் தொடர்ந்து செயல்படும் என்றார்.
கார்ப்பரேஷன் வங்கியுடன் ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் இணைக்கப்பட்டு நாட்டில் ஐந்தாவது மிகப்பெரிய வங்கியாக செயல்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அலகாபாத் வங்கியுடன், இந்தியன் வங்கி இணைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் வங்கி, ஓரியண்டல் வங்கி ஆகிய வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாக செயல்படும் என்று அறிவித்துள்ளார். பல்வேறு பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மூலம், 27 பொதுத்துறை வங்கிகளில் இருந்து 12 ஆக குறைந்துள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என்றும், அரசு வங்கிகளின் சேவை சிறப்படைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். மேலும் அரசு வங்கிகளுக்கு தேவையான மூலதனம் வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். மத்திய அரசின் நடவடிக்கையால் வாரா கடனின் அளவு குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.