இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனிடையே, தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்பட்ட ‘நெட்’ தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்திருந்தது. இது தொடர்பாக விளக்கமளித்த மத்திய கல்வி அமைச்சகம், ‘நெட்’ தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவில் இருந்து தகவல் வந்திருப்பதாகவும், அதனால் இந்த ஆண்டுக்கான ‘நெட்’ தேர்வை ரத்து செய்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வினாத்தாள் கசிவு புகார்களுக்கு இடையே நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “வினாத்தாள் கசிவினால், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை மட்டுமே பாதித்துள்ளது. கடந்த 2004 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பெரிய அளவில் வினாத்தாள் கசிவுகள் ஏற்பட்டதால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தன. தற்போது நடந்துள்ள சம்பவம் முந்தைய சம்பவங்களுடன் முற்றிலும் மாறுபட்டது. தேர்வை ரத்து செய்வதால் தேர்வில் சரியாக தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
சில தனிப்பட்ட முறைகேடு சம்பவங்களால் தேர்வில் சரியாக தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்க்கையை பணயக்கைதியாக வைத்திருப்பது நியாயமற்றது. பீகார் காவல்துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அவர்களிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அது கிடைத்தவுடன், எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். அமைப்பில் உள்ள முரண்பாடுகள் சரி செய்யப்படும். நமது அமைப்புகளில் நம்பிக்கை வைப்போம். எந்த முறைகேடுகளையும் அரசாங்கத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிமன்றத்தால் எடுக்கப்படும் எந்த முடிவும் இறுதியானது” என்று கூறினார்.