உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, போரை உடனடியாக நிறுத்த வேண்டும்; உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, உக்ரைனில் உள்ள சுமார் 15,000- க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை ருமேனியா நாட்டு வழியாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், உக்ரைனுக்கு அருகில் உள்ள நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் நாளை (26/02/2022) மதியம் 12.00 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இக்கூட்டத்தில் உக்ரைன் விவகாரம், இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பது குறித்து பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.
இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.