இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) செயலாளர் ரஜினிஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து, ‘’பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை மீறி அங்கீகாரமற்ற பல்கலைக் கழகங்கள் போலியாக செயல்பட்டு வருகின்றன. இப்போதைக்கு நாட்டில் 23 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இல்லாமல் பெயரளவுக்கு சுயமாக வடிவமைத்துக் கொண்டு போலியாக செயல்படுகின்றன. மாணவர்கள் இந்த பல்கலைக்கழகங்களில் சேர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்த 23 பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் சம்ஸ்க்ருத விஸ்வ வித்யாலயா, மஹிலா கிராம் விஸ்வ வித்யாலயா, காந்தி ஹிந்தி வித்யாபீடம், தேசிய எல்க்ட்ரோ காம்பிளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், உத்தரபிரதேச விஸ்வ வித்யாலயா. மஹராணா பிரதாப் சிக்ஷ்நிகேதன் விஸ்வ வித்யாலயா, இந்திரபிரஸ்த சிக்ஷ் பரிஷத் ஆகிய 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் ஒரு பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
அடுத்தபடியாக டெல்லியில் கமர்ஷியல் பல்கலைக்கழக நிறுவனம், யுனைடெட் நேஷனல் பல்கலைக்கழகம், ஏடிஆர் செண்ட்ரிக் ஜூரிடிக்கல் பல்கலை, புது தில்லி இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், விஸ்வகர்மா சுயவேலைவாய்ப்புக்கான திறந்தநிலை பல்கலைக்கழகம், அதியாத்மித் விஸ்வ விதயாலயா உள்ளிட்ட 7 பல்கலைக்கழகங்களும், மேற்குவங்காளம் மற்றும் ஒடிசாவில் தலா 2 பல்கலைக்கழகங்களும் உள்ளன.
நவபாரத் சிக்ஷ பரிஷத், வடக்கு ஒடிஸா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று ஒடிஷாவில் இரண்டு பல்கலைக்கழகங்களும், இந்திய மாற்று மருந்துக்கான கல்வி நிறுவனம், மாற்று மருந்து மற்றும் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் என்று மேற்கு வங்கத்தில் இரு பல்கலைக்கழகங்களும், மகாராஷ்டிராவில் ராஜா அரபிக் பல்கலைக்கழகமும் அங்கீகாரமற்றவை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், புதுச்சேரியில் உள்ள ஸ்ரீபோதி அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன், கர்நாடகாவில் பாதகாவி சர்க்கார் வேர்ல்டு ஓபன் யூனிவர்சிட்டி எஜுகேஷன் சொசைட்டி, கேரளாவில் செயின்ட் ஜான்ஸ் யூனிவர்சிட்டி ஆகியவை அங்கீகாரமற்றவை’’என்று தெரிவித்துள்ளார்.