நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்துக்கு பின்பு இதுவரை 141 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் மக்களவையில் பதாகைகளுடன் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பாகச் சென்று முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதாகக் கூறி மேலும் 2 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியைச் சேர்ந்த சி. தாமஸ் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (கேரளா) கட்சியைச் சேர்ந்த ஏ.எம். ஆரிப் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 141 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் இரு எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் மூலம் நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 143 எம்.பி.க்கள் சஸ்பெண்ட செய்யப்படுவது இதுவே முதல்முறை எனத் தகவல் வெளியாகியுள்ளது.