உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஷிஷ். இதில் அந்த குடும்பத்தின் வாழ்க்கை நலன் கருதி அவரது பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 35 வயது மதிக்கத்தக்க இவர் தான் வசிக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி தனது மனைவி குழந்தைகளுடன் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்துவந்த சமயத்தில்.. ஆஷிஷுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஆஷிஷ் சரியாக நடக்க முடியாமல் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகியுள்ளார்.
நாளுக்கு நாள் ஆஷிஷின் உடல்நலம் மோசமானதால் அவரை லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆஷிஷ் மீது அதிக பாசம் கொண்ட அவரது மனைவி 24 மணி நேரமும் தனது கணவர் உடன் இருந்து அவரை பராமரித்து வந்துள்ளார். இது ஒருபுறம் இருக்க குடும்பத்தில் ஏற்பட்ட பண நெருக்கடி காரணமாக ஆஷிஷுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத சூழல் உருவானது. இந்த நிலையில், தனது கணவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்து காசிப்பூர் பகுதியில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்தனர்.
அந்த ஆம்புலன்ஸ் வந்தவுடன் அதில் இருந்த டிரைவரும் உதவியாளரும் சேர்த்துக்கொண்டு ஆஷிஷின் மனைவியை முன் இருக்கையில் உட்காருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். அதே போல், அவரது சகோதரர் மற்றும் கணவரை பின்னால் உட்காரச் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி அந்த பெண்ணும் முன் இருக்கையில் உட்கார்ந்து செல்லும்போது சிறிது நேரம் கழித்து, அந்த டிரைவரும் உதவியாளரும் சேர்ந்துகொண்டு அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆனால், அந்த ஆம்புலன்ஸ் கண்ணாடிக்கு வெளியே எந்த சத்தமும் கேட்காது என்பதால் இதுகுறித்து ஊர்மக்களுக்குத் தெரியவில்லை. ஒருகட்டத்தில், இதைத் தெரிந்துகொண்ட கணவர் ஆஷிஷ் அவர்களிடம் சண்டைபோட்டுள்ளார்.
இதை பார்த்து ஆத்திரமடைந்த டிரைவர் தன்னுடைய கூட்டாளியின் துணையுடன் ஆஷிஷை ஆக்ஸிஜன் முகமூடியை கழற்றி, அவரை வாகனத்தில் இருந்து வெளியே தூக்கி வீசியுள்ளனர். அதே போல், அந்த பெண்ணின் சகோதரரைச் சரமாரியாகத் தாக்கி அவரை ஆம்புலன்ஸில் கட்டிபோட்டுள்ளனர். அதன்பிறகு, அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். பின்னர், அவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அதே வேளையில், ஆம்புலன்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆஷிஷ் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து சித்தார்த் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார்.. சம்மந்தப்பட்ட டிரைவரையும் அவரது உதவியாளரையும் அதிரடியாகக் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைக்குப் பிறகு.. இரண்டு பேர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓடும் ஆம்புலன்ஸில் இருந்து கணவர் தூக்கி வீசப்பட்டு மனைவியை டிரைவரையும் உதவியாளரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்.. உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.