ஒடிசா மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும், மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, கடந்த 16 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது பெண் முன்களப்பணியாளர், கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார். அதன்பின் அவருக்குத் தலைவலியும், தினமும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் ஒடிசாவின் பர்கார் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட, 27 வயதான பெண் செவிலியருக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு முன்களப் பணியாளர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஏற்படும் இதுபோன்ற பக்கவிளைவுகள் பொதுவானவை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.