பசிக்கு சாப்பிட உணவு இல்லாததால் மணலை சாப்பிட்டு இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மகேஷ் மற்றும் நீலவேணி தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். கூலி வேலைக்கு செல்லும் இவர்கள் தற்காலிக கூடாரம் அமைத்து அதில் தங்கிவந்துள்ளனர்.
மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த இவர்களின் குடும்பத்திற்கு உணவுக்கே கஷ்டப்பட்ட நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் 6 வயதான இவர்களின் மகன் சந்தோஷ் என்ற சிறுவன் பசி தாங்காமல் மணலை சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்தான். அந்த சிறுவனுக்கு இறுதி காரியங்கள் செய்ய கூட பணமில்லாத நிலையில், தங்கள் கூடாரத்திற்கு அருகிலேயே அந்த சிறுவனை புதைத்துள்ளனர்.
இந்நிலையில் நீலவேணியின் சகோதரி மகளான வெண்ணிலா என்ற சிறுமியும் இவர்களுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 28 ஆம் தேதி வெண்ணிலா பசி தாங்காமல் மணலை சாப்பிட்டுள்ளார். இதனால் அந்த சிறுமியும் உயிரிழந்தார். 6 மாதங்களில் அடுத்தடுத்த இரண்டு குழந்தைகளை இழந்த இந்த தம்பதியின் நிலைமை பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர்களிடம் விசாரித்த அனந்தப்பூர் மாவட்ட அதிகாரிகள், குழந்தையை அங்கன்வாடியில் சேர்த்திருக்க வேண்டியதுதானே என கேட்டுள்ளனர். ஆனால் அங்கன்வாடிகள் அனைத்தும் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஆந்திரா மாநிலத்தில் ஆதார் அட்டை இல்லாததால் அங்கன்வாடிகளில் குழந்தைகளை சேர்த்துக்கொள்ளவில்லை என அதிகாரிகளிடம் கண்ணீருடன் அக்குடும்பத்தின் கூறியது அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.