மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மறைந்து நேற்றுடன் ஒரு வருடமானது. அவரை நினைவுக் கூறும் வகையில் நேற்று மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் கணக்கில் ஜி.எஸ்.டி. தொடர்பாகவும் அதில் அருண் ஜெட்லி பங்களிப்பையும் கொண்டு ஒரு பதிவை பதிவிட்டிருந்தது. அந்த பதிவில் கூறியிருப்பதாவது, ஜி.எஸ்.டி. வரியானது இந்திய வரிவிதிப்பு வரலாற்றில் கொண்டுவரப்பட்ட அடிப்படையான மற்றும் முக்கியமான மைல்கல்.
ஜி.எஸ்.டி. வரி முறை கொண்டுவருவதற்கு முன் இந்தியாவில் வாட் எனப்படும் ஒருங்கிணைந்த மதிப்பு கூட்டு வரி, கலால் வரி, மத்திய விற்பனை வரி என 31% அதிகமாக இருந்தது. முன்னதாக இந்திய மாநிலங்கள் தனி தனியே வெவ்வேறு அளவிட்டான வரிகளை விதித்து வந்தமையால் பல பிரச்சனைகள் இருந்தது. தற்போது ஜி.எஸ்.டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்ததால் நாட்டின் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.24 கோடி என இரட்டிப்பாகியுள்ளது. ஜி.எஸ்.டி. மக்களின் வரி சுமையை குறைத்துள்ளது. ஜி.எஸ்.டி. வரிவித்திப்பு முறைக்கு முன் இருந்த வரி விதிப்பு முறையில் அதிகப்படியான வரி கட்டவேண்டிருந்தது. அதனால் மக்கள் அதிகம் வரி கட்டாமல் இருந்தனர். ஆனால் தற்போது ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நுகர்வோர் மற்றும் வரி கட்டுவோர் என இருத்தரப்பினருக்கும் இணக்கமாக உள்ளதனால் அதிகப்படியான வரி வசுலாகிறது என்று அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை கொண்டுவருவதற்கு முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எவ்வளவு முயன்றார் என்றும் அதற்கான சீரிய பணிகளை செய்தார் என்பதையும் நாம் அவரின் இந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.