வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (15.10.2024) வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாகச் சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரத்திற்கு நாளை (16.10.2024) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (14.10.2024) இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. முன்னதாக சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் தொடர் கனமழை காரணமாக ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டது.
அதே சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக விலகியதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழையானது தொடங்கி இருக்கிறது. இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளையும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (16.10.2024) விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.