புதுச்சேரி மாநில அமைச்சர்களான, வில்லியனூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நமச்சிவாயம் முதலில் பதவி விலகிய நிலையில், உசூடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தீப்பாய்ந்தான், ஏனாம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மல்லாடி கிருஷ்ணா ராவ், நெல்லித்தோப்பு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜான் குமார், ராஜ்பவன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த லட்சுமி நாராயணன் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெங்கடேசன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், நியமன சட்டமன்ற உறுப்பினர்கள், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.
முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு 12 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல், தனது தலைமையிலான அமைச்சரவையைக் கலைப்பது குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்போது 26 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்களிக்க உள்ளனர்.