தாஜ்மகாலை இனி மூன்றுமணி நேரம் மட்டுமே சுற்றிப்பார்க்க முடியும் என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலைச் சுற்றிப்பார்க்க உலகமெங்கிலும் இருந்து நாளொன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செல்கின்றனர். தாஜ்மகாலை பார்வையிட நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், நேரக்கட்டுப்பாடுகள் இல்லாததால் நாள் முழுவதும் அங்கே தங்கியிருந்து மாலைவரை செலவிடுபவர்கள் அதிகம். இதனால் ஏற்படும் இடநெருக்கடியைக் குறைக்க, பார்வையாளர் நேரத்தை மூன்று மணிநேரமாக குறைத்து அறிவித்துள்ளது இந்திய தொல்லியல் ஆராய்ச்சி மையம்.
இந்த நடவடிக்கை சரியானது அல்ல. நுழைவுச்சீட்டினை வாங்கி தாஜ்மகாலுக்குள் செல்வதற்காக காத்திருக்கும் நீண்ட வரிசையிலேயே எங்களுக்கு மூன்று மணிநேரம் ஆகிவிடும் என விரக்தியுடன் தெரிவித்துள்ளனர் சுற்றுலாப்பயணிகள். இதே காரணத்தால் இந்த மாற்றத்திற்கு தேசிய நினைவுச்சின்ன பாதுகாப்புக் குழுவும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
இருந்தாலும், இந்தத் திட்டத்தை திரும்பப்பெறும் நோக்கமில்லை எனக் கூறியுள்ள தொல்லியல் துறை, அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் தாஜ்மகாலுக்குள் செலவழிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.