டிக்டாக் செயலிக்குத் தடை விதித்த அரசாங்க உத்தரவுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில், மத்திய அரசிடம் விளக்கம் கொடுக்க உள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீன நிறுவனங்களின் டிக்டாக், வி சாட், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் என இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் செயலிகளை இந்தியாவில் தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அதிரடியாக அறிவித்து. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு ஒருபுறம் ஆதரவு அதிகரித்து வந்தாலும், ஒருபுறம் மத்திய அரசின் அறிவிப்பைக் கிண்டலுக்கும் ஆளாக்கி வருகின்றனர் இணையவாசிகள். இந்நிலையில், இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாடு குறித்து மத்திய அரசிடம் விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது டிக்டாக் நிறுவனம். இதுகுறித்து டிக்டாக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செயலிக்குத் தடை விதிக்கும் விவகாரத்தில் இந்திய அரசின் முடிவோடு இணக்கமான செயல்பாட்டை முன்னெடுக்க விரும்புவதாகவும், இந்தியப் பயனர்களின் தகவல்களைச் சீனா உள்ளிட்ட எந்த வெளிநாட்டு அரசாங்கத்துடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை அரசுக்குத் தெளிவுபடுத்த விரும்புவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.