கர்நாடகத்தில் மலிவு விலையில் மருத்துவப்படிப்பிற்கான சீட்டுகள்!
கர்நாடக மாநிலத்தில் மருத்துவப்படிப்பிற்கான சீட்டுகளுக்கான கட்டணத்தில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் மருத்துவப்படிப்பிற்கான சீட்டுகள், அதிக கட்டணம் காரணமாக காலியாகவே இருந்த நிலையில், அவற்றை நிரப்ப கட்டண முறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்காக கட்டணத்தில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்புவரை மருத்துவப் படிப்பிற்கான சீட்டுகளுக்கு ரூ.22 லட்சம் முதல் ரூ.42 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 40% வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மருத்துவப்படிப்பின் ஒட்டுமொத்த காலளவுக்குமான மொத்த செலவு ரூ.1.33 கோடியாக இருந்தது. அது இந்த ஆண்டு கிட்டத்தட்ட ரூ.1.8 கோடியை நெருங்கியுள்ளது.
இந்த ஆண்டு நீட் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடத்தப்பட்டாலும், பெரும்பாலான மாணவர்களுக்கு நினைத்த கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. எனவே, இந்த ஆண்டு கிட்டத்தட்ட 90% இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப எடுத்திருக்கும் முயற்சியின் மூலம் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ரூ.16,700, தனியார் கல்லூரிகளில் அரசு சீட்டுகளுக்கு ரூ.77,000 மற்றும் தனியார் கல்லூரிகளில் ரூ.6.32 லட்சமும் கட்டணமாக ஆண்டொன்றுக்கு வசூலிக்கப்படும்.
முந்தைய கட்டண நிலவரங்களால், மருத்துவப்படிப்பை விடுத்து பொறியியலில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்த பெற்றோர் தற்போது பெருத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
- ச.ப.மதிவாணன்