மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் புகழ்பெற்ற எழுத்தாளர் கவிஞர் நாராயண் சுர்வே. இவர் மும்பை தெருக்களில் ஆதரவற்ற சிறுவனாக இருந்த பின்னால், பிரபல எழுத்தாளராகவும், கவிஞராகவும் மாறியுள்ளார். இவரது வீடு, ராய்காட் மாவட்டம் நேரல் பகுதியில் உள்ளது. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது 84வது வயதில் வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்தார். தற்போது அவரது வீட்டில் மகள் சுஜாதா, கணவர் கணேஷ் காரேவுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், தம்பதியர் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு விராரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றுவிட்டனர். ஒரு வாரமாக வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட திருடன் ஒருவன், பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து டி.வி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளான். இதையடுத்து, மறுநாள் மீண்டும் அதே வீட்டில் மிச்சம் மீதி இருப்பதை திருட வந்த திருடன், வீட்டில் பிரபல எழுத்தாளர் நாராயண் சுர்வேவின் புகைப்படம் இருப்பதை பார்த்துள்ளார். அப்போதுதான், அது பிரபல கவிஞரின் வீடு என்பது தெரியவந்தது.
பிரபல கவிஞரின் வீட்டில் திருடிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில், வீட்டில் திருடிய டி.வி உள்ளிட்ட பொருட்களை மூட்டை கட்டிவிட்டு மீண்டும் கவிஞரின் வீட்டில் கொண்டு வந்து வைத்தார். மேலும், அதோடு ஒரு துண்டு சீட்டில் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி சுவரில் ஒட்டிச் சென்றுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘மிக உயர்ந்த எழுத்தாளர், கவிஞர் வீட்டில் திருடியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, வெளியூர் சென்ற தம்பதியர், வீட்டிகிற்கு வந்த போது திருடன் எழுதி வைத்திருந்த மன்னிப்பு கடிதத்தை பார்த்துள்ளனர். திருடனின் செயலைக் கண்டு தம்பதியர் நெகிழ்ச்சியடைந்தாலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறனர். மேலும், கவிஞரின் வீட்டில் கைவரிசை காட்டிய திருடனைப் பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். திருடன் ஒருவர், பிரபல எழுத்தாளரின் வீட்டில் திருடிய பொருட்களை, மீண்டும் வைத்து மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.