சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 190 நாடுகளுக்குமேல் பரவி, உலக அளவில் அச்சுறுத்தலையும், பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தெலங்கானாவில் ஜூன் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் , "தெலங்கானாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க இன்னும் முடிவு செய்யவில்லை, அது பரிசீலனையில் உள்ளது. ஏப்.15க்கு பிறகு மேலும் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் பரிந்துரை செய்துள்ளார்" என்று விளக்கம் அளித்துள்ளது.
தெலங்கானாவில் 321 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை கரோனா பாதிப்பில் இருந்து 34 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.