இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையை விட வேகமாக பரவி வருகிறது. தெலங்கானா மாநிலத்திலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அல்லது இரவுநேர ஊரடங்கு ஆகியவை விதிக்கப்பட்டாலும் தெலங்கானா மாநிலத்தில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
இந்தநிலையில், தெலங்கானா மாநிலத்தில் கரோனா பரவல் குறித்த வழக்கை விசாரித்த தெலங்கானா உயர் நீதிமன்றம், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என கோபத்தை வெளிப்படுத்தியதோடு, 48 மணி நேரத்தில் தெலங்கானாவில் ஊரடங்கையோ அல்லது இரவுநேர ஊரடங்கையோ அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் நீதிமன்றம் அதுகுறித்து முடிவெடுக்கும் என்றும் எச்சரித்தது.
இதனையடுத்து தெலங்கானா அரசு, தெலங்கானாவில் இன்று (20.04.2021) முதல் ஏப்ரல் 30ஆம் தேதிவரை இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை 8 மணிக்குள் மூட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.