புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு கிரண்பேடி நியமிக்கப்பட்டார். வாரம் தோறும் பல்வேறு பகுதிகளில் சென்று ஆய்வு செய்த அவர், ஏரிகள், குளங்களைத் தூர்வாரும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்தவர், பொதுமக்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்வுகளையும் செய்துவந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. மேலும், ஆளுநரை திரும்பப் பெறக்கோரி பல்வேறு போராட்டங்களை அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வந்தனர். கிரண்பேடியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் வகையில், புதுவையில் 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். கடந்த வாரம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்துப் பிரதிகளையும், புகார் மனுவையும் வழங்கினர்.
இந்நிலையில் நேற்று (16/02/2021) புதுச்சேரியில் இருந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கும் கூடுதலாக ஆளுநர் பொறுப்பைக் கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் அறிவித்தார்.
நாளை (18/02/2021) காலை 09.00 மணிக்கு துணைநிலை ஆளுநர் மாளிகையில் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்க உள்ள நிலையில், இன்று (17/02/2021) மாலை லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். அவருக்கு புதுச்சேரி விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "புதுச்சேரிக்கு கூடுதல் பொறுப்பாக இங்கு வந்துள்ளேன். அனைத்து நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டுப் பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.