ட்ரம்புக்கு சிலை வைத்ததுமட்டுமல்லாமல் கடவுளாக்கி தினசரி அபிஷேகம் செய்து வழிபடும் தெலங்கானாவைச் சேர்ந்த விவசாயி.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ள நிலையில் குஜராத்தின் குடிசை பகுதிகள் சுவர் எழுப்பி மறைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர். இந்த சூழலில், இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர் என வெள்ளை மாளிகை தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு ட்ரம்ப் செல்கிறார்.
அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா கிரிக்கெட் அரங்கை அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி ஆகிய இருவரும் திறந்து வைக்கின்றனர். அதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் பங்கேற்கிறார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தெலங்கானாவை சேர்ந்த விவசாயி ஒருவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஆறு அடி உயர சிலையை நிறுவியிருந்தார். ட்ரம்பின் தீவிர விசிறியான இவர் தற்போது அந்த சிலைக்கு பூஜை மேற்கொண்டு வருகிறார். ட்ரம்ப் சிலைக்கு நெற்றியில் திலகம் வைத்து, மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து, பாலபிஷேகம் வழிபடுகிறார். விவசாயின் கனவில் ட்ரம்ப் வந்ததால் ஒரு வருடத்திற்கு முன்பு தன்னுடைய கிராமத்தில் ட்ரம்பிற்காக சிலை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் ஒரு வலிமையான தலைவர், அவரது துணிச்சலான செயல்பாடுகள் பிடித்ததால் அவருக்கு சிலை வைத்து வழிபடுகிறேன் என்று சிலை வைத்ததற்கு விளக்கமளித்துள்ளார் விவசாயி கிருஷ்ணா. மேலும் இந்த சிலையை நிறுவ சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் செலவு செய்ததாக கூறியுள்ளார்.