தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பங்களாவில் வளர்ந்து வந்த செல்ல நாய் மரணமடைந்ததை அடுத்து, அதற்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அரசு பங்களாவில் (பிரகதி பவன்) வசித்து வருகிறார். இங்கு 11 நாய்கள் வளர்ந்து வருகின்றனர். இதில் 11 மாத நாய் ஒன்றுக்கு சில நாட்களுக்கு முன் உடல்நிலை மோசமானது. இந்த நாய் சைவ உணவை மட்டுமே சாப்பிடும் என்றும், பால் கூட குடிக்கவில்லை, மூச்சு விடுவதில் சிரமப்பட்டதால், பஞ்சரா ஹில்ஸில் உள்ள தனியார் விலங்குகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் லட்சுமி மற்றும் ரஞ்சித் ஆகியோர், அதற்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் நாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதனையடுத்து நாய் பராமரித்த ஆஷிப் அலி, பஞ்சார ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால், நாய் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவர்கள் லட்சுமி மற்றும் ரஞ்சித் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தால் அம்மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.