இந்தியாவின் முதல் தனியார் பயணிகள் ரயில் சேவை வரும் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் இருந்து டெல்லி வரை செல்லும் இந்த ரயிலை வரும் நாளை லக்னோ ரயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். 550 கிலோமீட்டர் பயணத்தை சுமார் 6.15 மணிநேரத்தில் முடிக்கும் வகையில் இந்த ரயில் பாதை திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் 758 இருக்கைகள் கொண்ட இந்த ரயிலில் சிறப்பு வசதிகளுடன் கூடிய ஏசி கம்பார்ட்மெண்ட் ஒன்று உள்ளது. அதில் 56 இருக்கைகள் உள்ளன. இதுதவிர 78 இருக்கைகள் கொண்ட 9 ஏசி கம்பார்ட்மெண்ட் உள்ளன. அதைத்தொடர்ந்து ஏசி அல்லாத கம்பார்ட்மெண்ட்டுகள் தனியாக உள்ளது. இடையில் கான்பூர் செண்ட்ரல் மற்றும் காசியாபாத் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயோ டாய்லெட்டுகள், வைஃபை, தகவல் தரும் எல்.சி.டி திரைகள், சென்சார் கொண்டு இயங்கும் தண்ணீர் குழாய்கள், புத்தகம் படிப்பதற்கான தனி விளக்குகள் போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ரயில். நாளை இந்த ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில், இந்த ரயில் தாமதமானால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். இதன்படி, ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாக தாமதம் ஏற்பட்டால், தலா 100 ரூபாய் வழங்கப்படும். இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டால், 250 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.