ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காயமடைந்தவர்களுக்குத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்தில் சிக்கிய தமிழர்களைத் தமிழ்நாட்டிற்கு மீட்டுக்கொண்டு வரும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
இந்நிலையில் ஒடிசா பாகநாகா ரயில் நிலையம் அருகே ரயில் விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது. விபத்தின் போது அடுத்தடுத்து நடந்தது என்ன என்பது குறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா விளக்கம் அளித்துள்ளார். “விபத்துக்குள்ளான சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் 128 கி.மீ. வேகத்தில் வந்துள்ளது. ரயில் விபத்து குறித்து பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. யஷ்வந்த்பூர் - ஹவுரா விரைவு ரயில் 126 கி.மீ. வேகத்தில் வந்தபோது தண்டவாளத்தில் கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்கு காரணம் தொழில்நுட்ப கோளாறாக இருப்பதற்கு 99.9% காரணம் இல்லை.
இரும்புத் தாது ஏற்றி வந்த சரக்கு ரயில் லூப் தண்டவாளத்தில் நின்றுகொண்டு இருந்ததே தவிர தடம் புரளவில்லை. இரும்புத் தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதிய கோரமண்டல் விரைவு ரயிலுக்குத்தான் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கனமான இரும்புத் தாதுடன் நின்ற சரக்கு ரயில் மீது மோதியதால் தான் அதிகச் சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. கோரமண்டல விரைவு ரயிலின் தடம்புரண்ட பெட்டிகளில் இரண்டு பெட்டிகள் யஷ்வந்த்பூரில் இருந்து சென்ற ரயிலில் மோதியுள்ளது. மற்றொரு தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயில் 126 கி.மீ. வேகத்தில் கடந்து கொண்டு இருந்தது. கடந்து சென்று கொண்டிருந்த யஷ்வந்த்பூர் ரயிலின் கடைசி பெட்டிகள் மீது கோரமண்டல் ரயிலின் தடம்புரண்ட பெட்டிகள் மோதின” எனக் கூறினார்.