புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
" புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சார்ந்த சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளது. அவர் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளார். திருபுவனை அருகே உள்ள குச்சிபாளையம் பகுதியில் கோயம்பேடு தொடர்புடைய ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது புதுச்சேரியில் 2 பேர் மட்டுமே கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகமும் புதுச்சேரியும் அருகாமையில் உள்ள மாநிலங்கள். இடையில் மாறி மாறி மாநிலங்கள் வரும். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கோட்டக்குப்பம் மக்களை புதுச்சேரி மாநில எல்லையான முத்தியால்பேட்டையில் தடுத்து நிறுத்துவது சரியாக இருக்காது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியிலிருந்து வெளி மாநிலம் செல்வதற்கும், வெளி மாநிலத்திலிருந்து புதுச்சேரி வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
புதுச்சேரியிலும் விரைவில் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுளது. மதுக்கடைகளை திறந்தால்தான் மாநில வருவாயை ஈட்ட முடியும். நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் மதுக்கடைகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். மதுவுக்கும், பெட்ரோலுக்கும் கோவிட் வரி விதிப்பது குறித்தும் நாளை அறிவிக்கப்படும்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் செயல்பாடு அரசுக்கு களங்கம் ஏற்படவேண்டும் என்ற வகையில் உள்ளது. சி.பி.ஐ முதல் அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றார்கள் என்று துணை நிலை ஆளுநர் அறிக்கை கொடுத்துள்ளார். தன்னுடைய பதவிக்கு, தகுதிக்கு ஏற்ப வேலை செய்யாமல் அதிகாரிகளின் நேரத்தை வீணாக்கி, நிர்வாகத்தை சீர் குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றார். புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி துரோகம் செய்து வருகின்றார்.புகார் கொடுத்த கிரண்பேடியை முதலில் சிபிஐ விசாரிக்க வேண்டும். அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றார். இது அவரது பதவிக்கு அழகல்ல. அதிகாரிகளை மிரட்டுவதும், பொய் வழக்கு போடுவதும், சி.பி.ஐ-ஐ தொடர்பு கொண்டு வழக்கு போட சொல்வதும் அவர் வேலையில்லை. அவரது செயல்பாடுகள் குறித்து முழுமையான அறிக்கையை பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் இதற்கு முடிவு வரும் என்று எதிர்பார்க்கின்றேன்.
மக்கள் சிரமத்தை போக்கவும், பலரும் பாதிப்படையாமல் இருக்கவும் தனிமைப்படுத்தபட்ட பகுதிகள் எவை என்பதை மாநில அரசு அறிவிக்கும் உரிமையை மத்திய அரசு வழங்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். மக்கள் பாதுகாப்புடன் மாநிலத்திற்கு பொருளாதார வளர்ச்சியும் முக்கியம். அருகில் உள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக உள்ளன. இதனால் நமது மக்களை பாதுகாக்கும் கடமை உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்து துறையும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 80 சதவீத மக்கள் அரசோடு ஒத்துழைக்கின்றார்கள். மீதமுள்ளவர்களும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.