மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவை நிதியை மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு நிறுத்தி வைத்திருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இது குறித்து சமீபத்தில் பேசினார்.
ஆனால், அவர் வைத்திருந்த கோரிக்கை மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நிதியை பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் தர்ணாவில் ஈடுபடுவேன் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அந்த வகையில், கொல்கத்தா ரெட் ரோட்டில் மைதான பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று (02-02-24) தொடங்கியுள்ளார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த தர்ணா போராட்டம் தொடர்ந்து 48 மணி நேரம் வரை நடக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி கூறுகையில், “ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கு வங்கத்தில் 6 மாவட்டங்களில் பயணித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 300 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கூறினேன். ஆனால், அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. இப்போது மேற்கு வங்கத்தில் இஸ்லாமிய வாக்குகளை குறிவைத்து பயணிக்கின்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளிலாவது வெற்றி பெறுமா? என்பது சந்தேகம் தான். நாம் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். குறைந்தபட்சம் காங்கிரஸ் வங்காளத்திற்கு வருவதை என்னிடம் தெரிவித்திருக்கலாம்.
உங்களுக்கு தைரியம் இருந்தால் வாரணாசியில் பா.ஜ.க.வை தோற்கடியுங்கள். நீங்கள் முன்பு வெற்றி பெற்ற இடங்களில் கூட தோல்வியடைவீர்கள். நாம் உத்தரப் பிரதேசத்தில் ஒன்றாக இல்லை. நீங்கள் ராஜஸ்தானில் வெற்றி பெறவில்லை. அந்த இடங்களை வெல்லுங்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது என்று நான் பார்க்கிறேன். அலகாபாத், வாரணாசி தொகுதிகளில் வெற்றி பெறுங்கள். நீங்கள் எவ்வளவு தைரியமான கட்சி என்று பார்ப்போம்” என்று கடுமையாக காங்கிரஸ் கட்சியை சாடி பேசினார்.