டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (26/02/2021) மாலை 04.30 மணிக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, "தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறும். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 19- ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது. வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 20- ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவைத் திரும்பப் பெற மார்ச் 22- ஆம் தேதி கடைசி நாளாகும்.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6- ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 2- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்" என்றார்.
தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.